திருவள்ளூர், ஆக. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு, மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து பழவேற்காட்டில் இயங்கி வரும் கிரினியோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புலிகாட் ஏரி , இந்தியாவின் 2 வது பெரிய காயல் பகுதி மற்றும் சுமார் 70 கிராமங்களில் வசிக்கும் 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும் தற்போது இத்திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில், ஆசிய கொடுவா மீன் ( லேட்ஸ் கால்காரிஃபர் ) மற்றும் மண் நண்டு ( ஸ்கைல்லா செர்ராட்டா ) ஆகியவற்றை நிலம் சார்ந்த குளங்களில் வளர்ப்பதன் மூலம் கடலோர சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உவர்நீர் மீன் வளர்ப்பில் அதிகாரமளிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குளத்துமேடு கிராமத்தில் இருளர் மற்றும் பழங்குடியின மீனவ சமூகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பெண் பயனாளிகள் மாற்று வருமானம் ஈட்டும் வகையில் கொடுவா மீன் மற்றும் நண்டு குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரிணியோ திட்ட பொறுப்பாளர் டாக்டர் மோசஸ் இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் கடற்பாசி கலாச்சாரத்திற்கு முன்னோடியாக விளங்கிய சிபாவின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர்.ஏ.ஆர்.திருநாவுக்கரசு, சிபாவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் செந்தில் முருகன், ஆர்.ஜி.சி.ஏ., குஞ்சு பொரிப்பக மேலாளர் டாக்டர். சண்முக அரசு, கிரிணியோ திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வின்சென்ட், கள அலுவலர் மீராசா, பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் வே. எழிலரசி, தமிழ்நாடு மீன்வளத்துறை சாகர் மித்ரா கலையரசி, உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் கிராம நிர்வாகிகள் செஞ்சியம்மன் நகர் டி.கே.ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.