கும்பகோணம், ஆக. 12 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமாகியது. அதனால் அதிகாரிகளும் விவசாயிகளும் செய்வதறியாது மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில், திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து. நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்வாண்டு முற்பட்ட குறுவை சாகுபடியில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு, விவசாயம் செய்து நெல் அறுவடை செய்து வந்தனர். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இட வசதிகளும் அடிப்படை வசதிகளும் இல்லாததால் நேற்றிரவு பெய்த கன மழையில் பல லட்சம் மதிப்பிலான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியது. அதனால் விவசாயிகளும், அதிகாரிகளும் செய்வதறியாது, மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைக்கவேண்டிய இடத்திற்கு மாற்றம் செய்யாமல் தற்காலிக கொள்முதல் நிலையங்களிலேயே அம்மூட்டைகளை தேக்கி வைக்கப்பட்டிருப்பதால், இத்தகைய நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இனிவரும் காலங்களிலாவது இதுப்போன்ற சேதம் ஏற்படாமல், மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளும் விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தை கவனத்தில் கொள்ளாமல் மெத்தப்போக்கை கடைப்பிடித்தால் மேலும் சேதங்கள் ஏற்பட்டு அரசுக்கு பெரிய இழப்பீடு ஏற்படும் எனவும் அப்பகுதி வாழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.