கும்பகோணம், மார்ச். 31 –
தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு தாங்கள் தவித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அந்நிலையை ஏற்படுத்தியுள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் எங்கே எனது வேலை? என முழக்கமிட்டவாறு அப்பிரச்சாரப் பேரணி மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு செட்டிமண்டபம், நால்ரோடு, பழைய பேருந்து நிலையம், வழியாக வந்து நேற்று காந்தி கும்பகோணம் பூங்காவில் நிறைவடைந்தது.
மேலும் அவர்கள் எங்கே எனது வேலை என்று கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக உள்ள பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் பத்தாயிரம் நிவாரணம் கொடு, மேலும் ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வேலைவாய்ப்புகளில் ஒப்பந்தம் மற்றும் அவுட் சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து தர வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ஊதியமாக ரூ. 21 ஆயிரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 45 வயதுக்குள் இறப்போர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி தொடங்கி உள்ளது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.