பொன்னேரி, ஜூலை. 16 –
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் பகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் காமராஜர் கால ஆட்சி முறை குறித்த மாபெரும் கருத்தரங்கம் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான டாக்டர் .ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரின் சொந்த செலவில் நலிவடைந்த மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 30 பேருக்கு தலா பத்தாயிரம் வீதம் ஊக்கத்தொகையும் .30 பேருக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் காமராஜர் என்றும் .பெரியார் ,அண்ணா, போன்ற திராவிட தலைவர்களும் காமராஜர் ஆட்சியை பாராட்டினார்கள் என்றும், காமராஜர் படிக்க வில்லை என்றாலும் தமிழக மக்களை படிக்க வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர் என்றும், காமராஜரின் பொற்கால ஆட்சி குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகளான சுகுமார், சந்திரசேகர், கார்த்திகேயன், வில்சன் ,பாலாஜி, வினோத், காமராஜ், அப்புன், உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























