கும்பகோணம், டிச. 20 –
108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் ஸ்ரீசாரங்கராஜா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. என இத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார். தாயார் கோமளவள்ளி இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது.
எனவே இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி திருக்கோயில் என போற்றப்படுகிறது.
மேலும் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் பாடல்கள் தந்த பெருமை மிக்க ஸ்தலமாகும். இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டிற்கான விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கி வருகிற 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளை முன்னிட்டு ஆண்டாள் அலங்காரத்தில் சாரங்கராஜா பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.