கும்பகோணம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கண்ணனின் சகோதரியின் மகனாவார். தி.மு.க.வில் ஊராட்சி இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே தண்ணீா் பாய்ச்ச சென்ற கலைவாணனை காணவில்லை என்று குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பம்பு செட் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் முத்துகிருஷண்ன், மற்றும் காவல்துறையினர் கலைவாணன் உடலை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுக் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நெய்குன்னம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த கொலை சம்பவத்தால் நெய்குன்னம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.