கும்பகோணம், பிப், 7 –
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில்,
முன் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்களிடம் பின் இருக்கையில் நாற்பது வயது மதிக்கத்தக்க மது அருந்திருந்த டிப்டாப் ஆசாமி சில்மிஷம் செய்துள்ளார்.
பேருந்தில் பயணம் செய்த பெண்கள் கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர்களுக்கு கைபேசி மூலம் பேருந்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம் நால்ரோடு பகுதிக்கு அந்த பேருந்து வந்ததும் சில்மிஷம் செய்த நபரை கீழே இறக்கி தர்மஅடி கொடுத்துள்ளனர். அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் பேருந்தில் சில்மிஷம் செய்த நபரை அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பேருந்து, பேருந்து நிலையத்திற்கு சென்றடைந்தது.
விசாரணையில் இவர் காவல்துறையைச் சேர்ந்த அமைச்சுப் பணியாளர் என தெரிய வரவே காவல்துறையினர் அந்த நபரை எச்சரித்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.























