கும்பகோணம், ஆக. 04 –

கும்பகோணம் அருகே உள்ள இஞ்சிகொல்லை ஊராட்சி  பகுதியில் ஓடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உள்வாங்கி திடீரென பழுதானதால், அப்பகுதியில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் விரைவில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே  திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் இஞ்சிகொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு கிராமத்தின் வழியாக ஓடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்து காணப்பட்டதால் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பாலம் வழியாக பொதுமக்கள் நடந்தும் மற்றும் இருசக்கர வாகனத்தில் மட்டும் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த பாலத்தின் கீழ்  தற்போது ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் சேதமடைந்து அப்பாலம் உள் வாங்கியுள்ளது.

இதனால்  இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவரும் பெரும் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். இதற்கு  மாற்றாக புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்ற நிலையில், இன்று அப்பாலத்தை  ஆய்வு செய்த திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன் விரைவில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருவிடைமருதூர் ஒன்றிய குழு உறுப்பினர் சுபா திருநாவுக்கரசு, கூகுர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர ஜெயபால், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here