கும்பகோணம், மே. 11 –
கும்பகோணம் மாநகர பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளது. அதில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அக்கடைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, அம் மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது, கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மற்றும் நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி அக்கடைக் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அக்கடை கல்லாப்பட்டியில் வைத்திருந்த அந்நகைகள் காணாமல் போனதுக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவ்விரு இளைஞர்கள் நகைகளை திருடி செல்வது தெரிய வந்தது.
உடனடியாக அக்கடையின் உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆய்வாளர் அழகேசன் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறையினர். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பி ஓடிய அக்கொள்ளையர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில் 134 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நகைக்கடை உரிமையாளர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.






















