கும்பகோணம், டிச. 23 –

கும்பகோணம் அடுத்த ஏரகரம் பகுதியில் மக்கள் குடியிருக்கும் வீட்டை மறைத்து சுவர் எழுப்பிய அறநிலையத்துறையின் மனிதாபிமானமற்ற செயலுக்கு சி.பி.எம்.கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது.

கும்பகோணம் அருகே ஏரகரம் ஊராட்சி அய்யனார் கோயில் தெருவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோ.சி மணி, நீலாவதி, கேசவமூர்த்தி, வசந்தி, மணிகண்டன், ரமேஷ், உள்ளிட்டவர்கள் பலரது குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இலவச குடி மனை பட்டா வழங்கி உள்ளது. மேற்படி நபர்களும் மின்சாரம் மற்றும் ஊராட்சி வரி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கந்தநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறி சுவாமிமலை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் திடீரென்று நேற்று காவல்துறையினரை பாதுகாப்புக்கு அழைத்து வந்து, சுவாமிமலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்படி குடியிருக்கும் வீட்டின் முன் பகுதியை இடித்து வீட்டில் உள்ள நபர்கள்  வெளி வர முடியாத அளவிற்கு வாசல் முன்பு தடுப்பு சுவர்களை எழுப்பி வருகின்றனர். தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் ஒன்றிய  செயலாளர் ஜேசுதாஸ் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழினியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மேற்படி நபர்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சுவர் எழுப்பும் படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் மனிதாபிமானமற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் வீட்டு வாசலிலே சுவரை எழுப்பிய நிலையில் சிபிஎம் சார்பில் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தற்சமயம் வாசலுக்கு மட்டும் இடத்தை விட்டுவிட்டு சுவர் எழுப்பிய நிலையில் போராட்டக் குழுவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் பெயரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் கூறுகையில் 50 வருடங்களாக குடியிருக்கும் மேற்படி நபர்களின் போக்குவரத்திற்கு அறநிலையத்துறை இடமாக இருந்தாலும் வழிப்பாதையை மட்டும் மனிதாபிமானத்துடன் தந்து உதவவும் அவர்களுக்கு அன்றாட வேலைகளுக்கும் சுப துக்க நிகழ்ச்சிகளுக்கு வீட்டை விட்டு வெளியேறவும் வழிவிட்டு சுவரை வைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு சுமூக தீர்வு ஏற்பட வேண்டுமென தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here