கும்பகோணம், டிச. 23 –
கும்பகோணம் அடுத்து பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. பெண்களின் திருமண வயது 21 என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை எனவும், ஆயுள் சிறைவாசிகள் விஷயத்தில் பாகுபாடின்றி நியாயமான போக்கை தமிழக அரசு கடைப்பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், எதிர்பார்த்ததைவிட இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை தாண்டி தமிழகத்தில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறி வரும் நிலையில், அதிமுக தனது 10 ஆண்டுகால ஊழல் ஆட்சியை மறைப்பதற்காக திமுக மீது குற்றம்சாட்டி வருவதாகவும் கூறினார். பேட்டியின் போது வக்பு வாரியத்தின் ஆய்வாளர் தாரிக், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஷாஜஹான், மாவட்ட செயலாளர் அப்துல்காசிம் ராஜாஜி, அய்யம்பேட்டை முஸ்லிம் பரிபாலன சபையின் ஜமாஅத் தலைவர்கள் சிம்லாநஜீப், வாலன்அக்பர்அலி உட்பட பலர் உடனிருந்தனர்.