கும்பகோணம், பிப். 22 –
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருகோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேர் 60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்துகொண்டு ஸ்ரீகும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்ற முழக்கமிட்ட படியே திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணத்தில் பாஸ்கர சேஷ்திரம், பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா காணும் மாநகரம் என பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட மகாமகம் பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்குவது மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
இத்திருக்கோவிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேரின் அனைத்து பகுதிகளும் சிதிலமடைந்து, சிற்பங்கள் பழுதாகி திருத்தேரோட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறையினர் கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் சுவாமிக்கு புதிய திருத்தேர் வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டுக் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் புதிய திருத்தேர் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டது.
இத்தேர் சுமார் 250 டன் எடையில், 26 அடி உயரத்தில், 16அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருத்தேர் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மாசி மகத் திருவிழாவின் போது திருத்தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ம் தேதி மாசி மக கொடியேற்றம் தொடங்கி முக்கிய நிகழ்ச்சி என தேரோட்டம் வருகிற 4ம் தேதி நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு, புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இத்தேரோட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.