கும்பகோணம், ஏப். 04 –
கும்பகோணம் மாநகரில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, போக்குவரத்து பிரிவு காவலர்கள், அலுவலர்கள், இக்கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நாள் முழுவதும், வாகன நெரிசல் ஏற்படாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்கள்.
இவர்களது பணியை பாராட்டிடும் வகையில், கும்பகோணம் நகரில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கும், அலுவலர்களுக்கும், கும்பகோணம் உட்கோட்ட காவல் சரகம் சார்பில், கடும் கோடை வெயிலினால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்புகளை ஈடு செய்யும் வகையில் சத்துக்கள் நிறைந்த பழரச பானங்கள், பழங்கள் வழங்கும் பணியை இன்று, கும்பகோணம் நால் ரோடு சந்திப்பு பகுதியில், துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் நாள்தோறும், காலையும், மாலையும் என இரு வேளைகளிலும் கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து இத்தகைய ஊட்டசத்துமிக்க பழரசங்கள், பழங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் பேபி, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
                
		





















