புதுக்கோட்டை, மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள் அம்மனை வழிபட்டு வந்தனர். இதனை அடுத்துக் கடந்த ஆண்டு அறநிலையத்துறையின் நிதி மற்றும் கிராம மக்கள் நிதியைக் கொண்டு குலதெய்வத்திற்குப் புதிதாகக் கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்ததை அடுத்து முதன் முதலாக காட்டேரி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அம்மனுக்கு உயிர் உண்டாக்கும் நிகழ்வு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று காவிரி ஆற்றில் எடுத்து வந்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால் ஸ்ரீ காட்டேரி அம்மனுக்கு மாஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவரான காட்டேரி அம்மனுக்குப் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டது. இக்கிராமத்தில் முதன் முதலாகக் கோவில் கட்டி பல ஆண்டுகளுக்குப்பிறகு திருவிழா நடந்தால் ஆத்தங்கரைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மகழிச்சியோடும் பத்தி பரவசத்தோடும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.