திருவாரூர். மே. 14 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக வந்திருந்த, தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கொட்டையூர் பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கொட்டையூர் பகுதியிலுள்ள மேட்டு தெரு, வடக்கு தெரு மற்றும் மயானத்திற்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது எனவும், அந்த சாலையை சரி செய்து கொடுக்கக் கோரியும், மேலும், தார் சாலை அமைத்து தர வேண்டியும் இம்முற்றுகையில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் அப்பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அதற்கான முயற்ச்சிகளை எடுப்பதாகக்கூறி அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அம்மனுக்கள் மீதான நடவடிக்கையை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து அறிவுறுத்தினார்.