திருவண்ணாமலை, அக். 7 –

ஏழை, எளிய, பாமர மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற உயர்வான நோக்கத்துடன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற சிறப்பான திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் –  திருவண்ணாமலை மாவட்டத்தில் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்திட தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (5.8.2021) அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவச் சேவை அளிப்பதைப் பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஃ நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதன் மூலம் ஆண்டு இறுதியில் மாநில அளவில் ‘அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உயரிய இலக்கை அடைய இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தினை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் (05.08.2021) அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை சுகாதார மாவட்டததில் 18,862 இரத்த அழுத்த நோயாளிகளும், 12,845 நீரிழிவு நோயாளிகளும், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,227 நோயாளிகளும், வயது முதிர்ந்த  இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவி பெறும் 1,192 நோயாளிகளும் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை பெறும் 1,198 நோயாளிகளும் என மொத்தம் 41,324 நோயாளிகளும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில்; 8,977 இரத்த அழுத்த நோயாளிகளும், 7,340 நீரிழிவு நோயாளிகளும், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4,684 நோயாளிகளும், வயது முதிர்ந்த  இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவி பெறும் 756 நோயாளிகளும் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை பெறும் 572 நோயாளிகளும் என மொத்தம் 22,329 நோயாளிகளும் இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த கொரோனா காலத்திலே நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீண்டும் கொரோன 3வது அலை வருமென்று உலக சுகாதார மையம் (றுர்ழு) தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர், அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தார்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தினால் பலபேர் பயனடைந்துள்ளனர். கிராமத்தில்; இருக்கும் தாய்மார்கள் எல்லாரும் பிரவச காலத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான்; சிறப்பாக பிரவசம் பார்க்கப்பட்டு உயிர்காப்பாற்றி கொண்டு வருவதில் முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் கொண்டார்.  பொது மக்களின் பிரச்சனை போக்கும் வiயில் தமிழ்நாடு அரசு, தற்போது அரசு மருத்துவமனைகளில் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிடும் மக்களின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகளை அளிக்க இருக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வர இயலாத 45 வயதிற்கு மேற்பட்ட ஏழை, எளிய மக்கள், மலைவாழ் மக்கள், இதுநாள் வரை தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தவர்கள் உட்பட பலரும் இத்திட்டத்தினால் பயனடைய உள்ளனர்.
இது தவிர, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடிச் சென்று பிசியோதெரபி செய்யப்பட்டு வருகிறது. வீடு தேடி வரும் வாகனங்கள் மூலம் நோய் வாய்ப்பட்டவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளித்து, தேவைப்படும் மருந்துகளை மொத்தமாக இரண்டு மாதங்களுக்கு உரிய அளவில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வீடு தேடி சிகிச்சை அளிக்க வரும் வாகனத்தில் இயன்முறை மருத்துவர், இயன்முறை ஆதரவு சிகிச்சை செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்டோரும் இருப்பார்கள்.
எந்த சேவையையும் மக்கள் தேடிச் வந்து பெற்றுக்கொள்ளும் நிலைமை இருப்பதை விடவும், தேடிச் சென்று சேவையை வழங்குவது சாலச்சிறந்தது என்பதற் கேற்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் மூலம் பொது மக்கள் அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த திட்டத்தினை தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட  மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

தொகுப்பு : வெ.லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here