திருவாரூர், ஏப். 23 –
திருவாரூர் மாவட்டம் புதுககுடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் திருவாரூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், புதுக்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பாக அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் தேசிய திருவிழாவாக நடைபெற்றது.
இதில் மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களும், மக்கள் நேரிடையாக பயனடையும் வகையில். காது மூக்கு தொண்டை, எலும்பு மற்றும் பெண்களுக்கு உரிய சிறப்பு மருத்துவம், மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகள் இடம் பெற்றிருந்தன.
இம்முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு நேரிடையாக பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து உடன் மருந்துகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பரிசோதனை செய்யப்பட்ட மேல் சிகிச்சை தேவைப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் சித்தா, ஆயுர்வேத போன்ற மருத்துவ பிரிவும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மற்றும் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் செய்திருந்தனர்.