திருவாரூர், ஜூலை. 28 –
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாசல் முன்பு நேற்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகத்தில் விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை எனவும் அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டு இதனால் விவசாயிகள் (2020-21) மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தனர். இந்த ஆண்டும் அதுப்போன்றே எந்வித நடவடிக்கையைம் அரசு மேற்கொள்ளவில்லை எனவும், மேலும், வரும் 30.07.2022 காப்பீடு செய்வதற்கான கெடு தேதி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே உடன் நடவடிக்கை எடுத்து பிரிமியம் செலுத்துவதற்கான கால நீட்டிப்பை வழங்கி குறுவைக்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று சென்ற ஆண்டு 2021-22 சம்பா பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையிலும் இழப்பீடு தொகை வழங்குவதற்கான எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. உடனடியாக இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தமிழகத்தில் உர விநியோகத்தில் ஸ்பிக் நிறுவன இடுபொருட்களை பெற்றுக் கொண்டால்தான் யூரியா, டிஏபி உரங்கள் வழங்க முடியும் என கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக ஒரு மூட்டை யூரியா ரூபாய் 270 அதனுடன் சேர்த்து ரூபாய் 750க்கு இடுபொருள் பெற்றுக் கொண்டால்தான் யூரியா, டிஏபி கொடுக்க முடியும் என்று விற்பனையாளர்கள் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் மிரட்டி அச்சுறுத்தி விற்பனை செய்து வருகிறது.
இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகிவுள்ளனர். மேலும், இது குறித்து உடனடியாக உற்பத்தி நிறுவனங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும், மேலும், உரம் தட்டுப்பாடின்றி அரசு நிர்ணயிக்கும் விலையில் வெளிப்படையாக விற்பனை செய்வதை உறுதிசெய்ய வேண்டும். எனவும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 வழங்கி செப்டம்பர் 1 முதல் கொள் முதல் செய்திட வேண்டும் எனவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4500ம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறோம்.
அக்டோபர் 1 முதல் கோடைப்பருவ காரிப் கொள்முதல் தமிழ்நாட்டிற்கு பொருத்தம் இல்லாத நிலையில் உள்ளது. அக்டோபர் மாதம் முதல் காரிப் கொள்முதல் அமல்படுத்தப்படுவதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஜனவரி வரை நீடிப்பதால் கோடையை குறிப்பிடும் காரிப் கொள்முதல் தமிழ்நாட்டிற்கு பொருத்தமில்லை. தற்போது செப்டம்பர் 1ஆம் தேதியே கொள்முதல் செய்வதற்கான அனுமதி பெற்று இருந்தாலும் கூட ஈரப்பத நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி பெறுவதில் ஏற்படுகிற காலதாமதத்தால்தான் விவசாயிகள் நெல்லை வீதிகளில் கொட்டி மழைகளில் அழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக ஈரப்பத நெல் தமிழகத்திற்கென தனி கொள்முதல் கொள்கைக்கான உரிய அனுமதியை பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூன்று மாவட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு மனு வழங்கி வாசலில் வந்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
பேட்டி: பி. ஆர். பாண்டியன்
( விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்)