கும்பகோணம், பிப். 11 –
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் கடந்த 27ம் தேதி கணபதி பூஜை, உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் புவனேஸ்வரி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் களுடன் நடைபெற்று வந்தன. இதில், திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்ட மடாதிபதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 06 ஆம் தேதி முதல் காலம் யாக பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து இன்று காலை வரை 11 கால யாக பூஜைகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து வேத விற்பன்னர்கள் யாகசாலையில் இருந்து புனித நீரை சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவரின் விமானக் கலசத்திற்கு கொண்டு சென்றனர்.
காலை 8 மணியிலிருந்து 9- 30 வரை வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றதது. கும்பாபிஷேக விழாவில் கடந்த 29ம் தேதி முதல் தினமும் பாகவதர்களின் பல்வேறு நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இது, சங்கீர்த்தன விழாவிற்கு பெருமை சேர்த்தது. இந்த விழாவில் பரனூர் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி மகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஏராளமான பொருட் செலவில் மகாகும்பாபிஷேகம் நடப்பதால் அப்பகுதி விழாக்கோலம் போல் காட்சியளித்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள், வைணவ மடாதிபதிகள், ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துறவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறை படி கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொட்டும் மழையிலும் தடையில்லாது நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.