சீர்காழி, மே. 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பிற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிபிஏ,பிஏ தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை பட்ட படிப்பு தேர்வு மதியம் நடைபெற்ற நிலையில் 300 மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரி முதல்வர் அறைக்குள் வந்த நபர் தன்னை பறக்கும் படை அதிகாரி என கூறி மாணவர்கள் சோசனை செய்ய வேண்டுமென கூறி தொடர்ந்து என்னுடன் தொடர்ந்து வாருங்கள் என்று பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று தேர்வு எழுதும் மாணவர்களை ஆய்வு செய்தார்.

பின்னர் அலுவலர்கள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் அந்த நபரை அங்குள்ள பேராசிரியர்கள் வரவேற்று காபி மற்றும் இனிப்பு வழங்கிவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவரை கல்லூரி பொறுப்பு முதல்வர் முரளி மற்றும் ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் போலி அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் சேர்ந்து பிடித்து அறைக்குள்ளேயே தங்க வைத்தனர்.

மேலும் அதுக் குறித்து தகவலறிந்த கொள்ளிடம் உதவி ஆய்வாளர்  அருண்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்த போது அவர் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பார்த்திபன்(27) என்பதும் ஆங்கிலம் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் ஏன் அப்படி போலி  பறக்கும்படை அதிகாரியாக கல்லூரிக்குள் புகுந்தார் எனவும் மேலும் அதன் பின்னணி குறித்தும் பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி அறைக்குள் புகுந்த போலி தேர்தல் பறக்கும் படை அதிகாரியால் அக் கல்லூரி வளாகத்திற்குள் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here