தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40) இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்ப நாளான கடந்த 16-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரகாஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் பிரகாஷ் அன்று நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது செல்போனை அவரதுமனைவி கமலாதேவி தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர் உதவியுடன் பல இடங்களில் பிரகாசை தேடி பார்த்தும், கிடைக்காத நிலையில், மறுநாள் தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானம் அருகே மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரகாஷ் காயத்துடன் பிணமாக கிடப்பதாக பிரகாஷின் மனைவி கமலாதேவிக்கு அவரது உறவினர் தகவல் தெரிவித்துவுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது பிரகாஷ் காயத்துடன் பிணமாக கிடந்ததை பார்த்து கமலாதேவி கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து, அச்சம்பவம் குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் கமலாதேவி புகார் அளித்துள்ளார்.
கமலாதேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அக்கொலைக் குறித்து தனிப்படையினர் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அதில் நல்ல குடிபோதையில் இருந்த பிரகாசை அவரது மோட்டார் சைக்கிளில் ஒருவர் அழைத்து செல்வதும், அவர்களை பின் தொடர்ந்து மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதும் தெரியவந்தது. மேலும் அக்காட்சிகளில் பதிவான புகைப்படங்களை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் புகைப்படத்தில் இருந்தவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி (வயது29), எனவும், மற்றொருவர் தஞ்சை மங்களபுரம் அணில்நகரை சேர்ந்த ரமணி மகன் பிரவீன் (28) என்பவதும் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திவுள்ளனர். போலீசாரின் விசாரணையில் குடிபோதையில் இருந்த பிரகாசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டதுடன் மோட்டார் சைக்கிளையும் எடுத்து கொண்டு சென்றதாகவும், மேலும் அவர்கள் இருவரும் பலமாக தாக்கியதில் பிரகாஷ் இறந்ததாக அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் தெரியவந்த தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.