காஞ்சிபுரம், செப். 22 –
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
இம் மருத்துவமனையில் பல்வேறு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவுகள் இருப்பது சிறப்பம்சமாகும். அதனால் இம் மருத்துவ மனையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் புற நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்குள்ளும் வளாகத்திற்குள்ளும் மற்றும் புற பகுதிகளிலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தா வண்ணம் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய இம் மருத்துவமனை நிர்வாகம், நோயளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை எல்லாம் ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் குவிக்கப்பட்டு அதனை தீயிட்டு கொளுத்தி வருகிறது.
இதனால் உள் மற்றும் புற நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சரும நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும் மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து எழும் புகை மண்டலங்கள் நகரின் சுற்று புறத்தில் மாசை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோயற்ற பொதுமக்களுக்கு நோய் ஏற்படுத்தும் வகையில் கண்ணெரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பிரச்சினைக்கு உடனடியாக நல்லதொரு தீர்வுக் காண மருத்துவமனை நிர்வாகம், காஞ்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.