ஸ்ரீபெரும்புதூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்து கலால்துறை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுரேஷ்குமாருக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் மண்ணூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கூண்டு ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.
அப்பொழுது ஆட்டோவிற்குள் சுமார் 1400 முட்டைகள் அடுக்கப்பட்டு அதன் பின்புறம் மூட்டை மூட்டையாக குட்கா பொருள் இருந்தது அவர்கள் நடத்திய வாகனச் சோதனையில் தெரியவந்தது. உடனடியாக ஆட்டோ மற்றும் ஆட்டோவில் இருந்த இருவரை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
மேலும் அவர்கள் இருவரும் வெள்ளரிதாங்கள் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் 34, சிவா 28 என்பதும், உடன் பிறந்த சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் பாப்பரம்பாக்கத்தில் மளிகை கடை வைத்துள்ளார்கள் என்பதும் அவ்விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேப்போல அவர்கள் மண்ணூர், வளர்புரம், மேவளூர் குப்பம், தண்டலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


















