கும்பகோணம், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பழனியண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பலவண்ண நறுமண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, இராஜ அலங்காரததில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது, அக் கண்கொள்ளக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வெளியில் நின்ற படியே சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுள் எனவும் அழகன் எனவும் போற்றப்படும் திருமுருகனின் திருத்தலங்களுள் கும்பகோணம் தென் பழனியாண்டவர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இங்கு ஆண்டுதோறும் ஏழு நாட்களுக்கு கந்தசஷ்டி பெருவிழா, கார்த்திகை பெருவிழா, ஆடிக்கிருத்திகை மற்றும் மாதம் தோறும் வரும் திருக்கார்த்திகை மற்றும் சஷ்டி நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதனைப்போன்று, இன்று, தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவர் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட பலவிதமான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு, பலவண்ண நறுமண மலர் மாலைகளுடன் விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு, இராஜகோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க மகாதீபாராதனை காட்டப்பட்டது. அக் கண்கொள்ளா காட்சியினைக் காண ஏராளமான பக்தர்கள் வெளியில் இருந்தவாறே உளமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்றிரவு சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.