கும்பகோணம், ஜன. 10 –

உலக மக்களின் நன்மைக்காக சென்னையில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை வரை சுமார் 650 கி.மீ தூரம் ஐயப்ப பக்தர் ஒருவர் தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற ஐயப்ப பக்தர் ஒருவர் 16 ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சென்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனா எனும் கொடிய நோய் தொற்றால் உலக மக்கள் அனைவரும் பொருள், மற்றும் உயிர் பாதிப்பால் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருவது தனக்கு மன வருத்தத்தை தந்ததாகவும், அதனால் 17 வது முறையாக சபரிமலைக்கு செல்லும் நாம் உலக மக்களின் நன்மைக்காக சுமார் 650 கி.மீ தூரம் உள்ள சபரி மலைக்கு சைக்களில் பயணம் செய்து உலக மக்களின் இன்னல்களை போக்கிட வேண்டும் என ஐயப்பனை வேண்டிக் கொள்வதென முடிவெடுத்து கடந்த 8 ஆம் தேதி தொடங்கியதாக நேற்று கும்பகோணம் வந்தடைந்த அவர் அப்போது  தெரிவித்தார்.

மேலும், இந்த ஐயப்ப பக்தரான பழனிச்சாமிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அனைவரும் கல்லூரி பள்ளி படிப்பு என தற்போது நன்றாக படித்து வருவதாகவும், மேலும் தான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கடந்த 8ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட அவர், நேற்று கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, சோழபுரம் பகுதியில் உள்ள சென்னை கும்பகோணம் நெடுஞ்சாலையில் இரவு உணவருந்தி விட்டு மீண்டும் தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சுவாமியே சரணம் ஐயப்பா என்று குரல் எழுப்பியவாறு தனது சைக்கிள் பயணத்தை சபரிமலை நோக்கி தொடங்கினார். மேலும் இன்று காலை தஞ்சாவூர் திருச்சி கரூர் திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்வதாக தெரிவித்தார்.

மதம், மனம், சாதி, பணம், பொருள், என அனைத்து வகையிலும் மனித இனம் வேறுப்பட்டும் பிரிந்தும் பகைமை என்ற உணர்வோடு வாழ்ந்து வந்தாலும், மனிதநேயம் எனும் நூலிழை உறவுக்குள் இணைந்துதான் வாழ்கிறோம் என்பதை இந்த ஐயப்ப பக்தனின் உலக மக்கள் நன்மைக்காக மேற் கொள்ளும் இந்த சைக்கிள் பயணத்தின் மூலம் உணர முடிகிறது. மேலும் இவரின் இந்நோக்கமும் பயணமும் இனிதே வெற்றியடைய அனைவரும் வாழ்த்தி மனிதநேயத்தை எப்போதும் போற்றி காத்திடுவோம்…

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here