தஞ்சாவூர், பிப். 6 –

மிகவும் பழமை வாய்ந்த இரட்டை விநாயகர் என்கின்ற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் இரட்டை விநாயகர் என்கிற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இவ்வாலயம் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தை மாதம் 22 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், ஆசார்ய வர்ணம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், அக்னி சங்கர்ஷணம், கஜ பூஜையுடன் துவங்கி முதல் கால பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று நான்காம் கால யாக பூஜையில் மஹா பூர்ணாஹூதியுடன் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாத்ரா தானத்துடன் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. சரியாக 10 மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு மூலவரான இரட்டை விநாயகர் என்கிற தாமோதர விநாயகர் ஸ்ரீமங்களாம்பாள் சமேத ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரகம், தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை திருவெள்ளியங்குடி ராமகிருஷ்ண சிவாச்சாரியார் யாக பூஜைகளுடன் ஆலய தக்கார் லெட்சுமி, நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில் எழுத்தர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நாக சுப்பிரமணிய அய்யர் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக இவ் விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here