கும்பகோணம், ஜன. 06 –
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களான சாக்கோட்டை திருக்கலையநல்லுார் அமிர்தகலசநாதர் கோயிலை தவிர மற்ற
11 கோயில்களான ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில், நாகேஸ்வர சுவாமி கோயில், சோமேஸ்வரசுவாமி கோயில், ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி கோயில், கவுதமேஸ்வர சுவாமி கோயில், அபிமுகேஸ்வர சுவாமி கோயில், காசி விஸ்வநாத சுவாமி கோயில், காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில், பாணபுரீஸ்வர சுவாமி கோயில், கோடீஸ்வர சுவாமி கோயில், ஏகாம்பரேஸ்வர சுவாமி கோயில்களின் நடராஜ மூர்த்தி புறப்பட்டு ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயில் கீழரத வீதிக்கு காலை 11 மணிக்கு எழுந்தருளி நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது.
மேலும் இன்று மதியம் 2 மணிக்கு அந்தந்த கோயில்களுக்கு நடராஜ மூர்த்தி திரும்பி சென்றனர். நடராஜர் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஒரு இடத்தில் ஒன்று சேர ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.