மீஞ்சூர், ஜூன். 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது மக்களிடையே அவ்விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி நடத்திட, அக்காவல் ஆணையரக சரகத்திற்குட்பட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி மாணவர்கள் இணைந்து இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீஞ்சூர் பகுதியில் மேற் கொண்டனர்.
இவ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் முனுசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கியும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விளக்கி கூறியும், அவர்களிடம் போதை எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, இவ்விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் மாணவ, மாணவிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறும், போதைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்றனர்.
மேலும் இவ்விழிப்புணர்வுப் பிரச்சார பேரணி மீஞ்சூர் நகரின் முக்கிய பகுதிகளான அரியன்வாயல், மீஞ்சூர் பஜார் வீதி, இரயில் நிலையம் ஆகிய பகுதிகளின் வழியாக சென்றது.
இதில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் அபுபக்கர் கல்லூரி முதல்வர் சுஜாதா இரயில்வே காவல்துறை ஆய்வாளர் ரவி, மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சைமன், தேசிய மாணவர் படை ஆசிரியர் முரளிதரன் ,முத்துகுமரன், சீனிவாசன், சரண்யா ,மற்றும் பாலாஜி உட்பட நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் என திரளானவர்கள் இவ்விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.