செங்கல்பட்டு, மே. 17 –
கடலூர் மாவட்டம், மஞ்ச கொள்ளை பகுதியை சேர்ந்தவரான 46 வயதுடைய வெங்கடேசன், தனது மனைவி பத்மா (40) மற்றும் மகன்கள் தர்மா (17) ஹரிஷ் (7) ஆகியோருடன் சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் தி.நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடேசன், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக கடலூர் சென்று விட்டு மீண்டும் இன்று அதிகாலை சென்னை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் செங்கல்பட்டு புறவழி சாலையில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர காவல் நிலைய காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.