வலங்கைமான், மார்ச். 23 –
திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 30 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் 26 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும்.
இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, புலவர்நத்தம், நரிக்குடி ஆகிய மூன்று ஊர்களின் மாணவர்கள் பயிலக்கூடிய வகையில், ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அப்பகுதியில் இருந்து வந்த நிலையில்,
மேலும் அப்பள்ளி கட்டப்பட்டு வெகு காலம் ஆனதால், பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில், அப்பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு, இரண்டு மாதத்திற்குள் புதிய கட்டிடம் கட்டித் தருவதாக கூறப்பட்டு, அதன்பிறகு அதுவரை அப்பள்ளி மாணவர்கள் கல்விப்பயில பாப்பாக்குடி ஊராட்சியில் நரிக்குடி பகுதியில் இயங்கி வரும் இ சேவை மையத்தில் அப்பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது.
மேலும் இப்பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது கல்விப்பயின்று வரும் நிலையில் அப்பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து நிலை மாணவர்களுக்கும் வகுப்பறை வசதியில்லாததால் தனித்தனி வகுப்பறையின்றி அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே இடத்தில் அருகருகே அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது தற்காலிகமாக இயங்கி வரும் இ- சேவை மைய பள்ளிக் கட்டிடமும், மிகவும் சிதிலமடைந்தும், தரைப்பகுதி முழுவதுமாக பெயர்ந்தும், தகுந்த பாதுகாப்புகளின்றியும், பாம்பு பல்லிகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புழக்கம் உள்ள இடமாக அது காட்சியளிக்கிறது. அச்சூழலில் அங்கு அம்மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பின்றி இருந்து வருகின்றனர்.
மேலும், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முறையான கழிப்பிட வசதி இல்லாததால், அவர்கள் அனைவரும் திறந்தவெளியை உடல் உபாதைகளைக் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இடிக்கப்பட்ட பழையப் பள்ளியை அதேயிடத்தில் புதிய பள்ளிக்கட்டடத்தை உடனடியாக கட்டி தர வேண்டும் என மூன்று ஊராட்சி பகுதி வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குறிப்பாக அப்பள்ளியில் கல்விப்பயின்று வந்த மாணவர்கள் அப்பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு பிறகு அப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது அனைத்து நிலை வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையே சுமார் ஐம்பதுக்குள் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் மன வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.
இதனால் தொடக்க நிலை கல்வி பயிலும் மாணவர்களின் இடைநிறுத்தம் அதிகமாகிவுள்ளதாகவும், மேலும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் இடைநிறுத்தம் ஆன மாணவர்களையும் மீண்டும் இப்பள்ளியில் இணைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் அரசை வலியுறுத்துகின்றனர்.
பேட்டி: 1.சுகந்தி 2. ராமையன் பாப்பாகுடி கிராமத்தார்