திருவாரூர், செப். 14 –
மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மன்னார்குடி கோட்டத் தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில், வாரிய உத்தரவு எண் இரண்டு ரத்து செய்திட வேண்டும், மேல் ஊழியர்களுக்கு பயிற்சி காலத்தை குறைத்திட, கால முறை ஊதியம் வழங்கி சொந்த மாவட்டத்திற்கு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கிட வேண்டும். பிரிவு அலுவலகத்திற்கு தரமான தளவாட பொருட்களை விரைந்து வழங்கிட வேண்டும். கணக்கிட்டு பிரிவு ஊழியர்களுக்கு ரீடிங் எடுக்க தரமான ஹெட்செட், வசூல் செய்திட பிரிண்டர்ஸ், பணம் என்னும் இயந்திர கருவி, பாதுகாப்பான சேர் டேபிள் வழங்கிட வேண்டும். திருவாரூர் மின் வட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களுக்கு தொழிற்சங்க கட்டிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகையன், திட்ட செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் குமார், கோட்ட செயலாளர் வினோத், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு விஜயா, திட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திட்ட பொருளாளர் முகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.