திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள செய்யாற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் போளூர் வட்டம் வம்லூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு (34) உடகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (32) என தெரியவந்தது. இவர்கள் அடிக்கடி அப்பகுதியில் மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணல் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து சீனுவையும் முரளியையும் காவல்நிலையத்துக்கு விசாரணைக்குவரும்படி உதவி ஆய்வாளர் பிரபாகரன் கூறினார். ஆனால் அவர்கள் காவல்நிலையம் வர மறுத்து உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 மாட்டுவண்டிகளையும் காவல்நிலையத்திற்கு போலீசார் கொண்டுவந்தனர். இந்நிலையில் நேற்று சீனுவும் முரளியும் காவல்நிலையத்திற்கு வந்தனர். பின்னர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்த பின்னர் இருவரும் வீட்டிற்கு தனித்தனியாக புறப்பட்டனர். அப்போது முரளி ஆற்றின் வழியாக சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை. விசாரணைக்கு சென்ற முரளி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது நேற்று மாலை செய்யாற்றின் கரையோரம் உடல் கருகிய நிலையில் முரளி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சடலத்தை வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர். தகவல் அறிந்த போளூர் காவல்துறையினர் முரளியின் வீட்டிற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் சடலத்தை கொடுக்க மறுத்து களம்பூர் உதவி ஆய்வாளர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்ததால்தான் முரளி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு போலீசார்தான் என கூறி தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஏடிஎஸ்பி அசோக்குமார் டிஎஸ்பிகள் அறிவழகன் கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் கிராமத்திற்கு சென்று முரளியின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய விசாரணை நடத்தப்படும் என கூறி முரளியின் சடலத்தை மீட்டு திருவணணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் முரளியின் உடல் கருகி இருப்பதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த முரளி வீட்டிற்கு திரும்பும் வழியில் விவசாய நிலத்தில் எலி பன்றிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் இதனை கண்ட நிலத்தின் உரிமையாளர் முரளியின் சடலத்தை தூக்கிச்சென்று செய்யாற்றின் கரையோரம் வீசியிருக்கலாம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பி பவன்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து மின்வேலி வைத்ததாக கூறப்படும் சில விவசாயிகளை போளூர் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here