மீஞ்சூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண் (23) என்பவரோடு மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
மேலும் அவர்களது ஒரே மகனான கிரண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் மே 1ஆம் தேதியான அரசு விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில் மதியம் 1 மணி அளவில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
மேலும் கிரணுக்கு நீச்சல் சரிவர தெரியாத நிலையில் ஏரியின் ஆழத்தில் சென்றவர் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கியுள்ளார். அதனை கரையின் மேற்புறத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டு உள்ளனர்.
மேலும் அத்தகவலை மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு வீரர்களை அழைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 7 மணி வரை தேடிப் பார்த்தும் கிரனின் உடல் கிடைக்காததால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியை தள்ளி வைத்தனர். அதனை கரைமேல் நின்று பார்த்து கதறி அழுதவாறு அவரது பெற்றோர்கள் வேதனையுடன் வீடு திரும்பினர். மேலும் அச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
























