திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த வடிவேல் (62) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மைத்துனர் மூர்த்தியுடன் தனது மாந்தோட்டம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர்.
பின்னர் மண்ணூர் கூட்டுச்சாலையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த பனை நுங்கு வாங்கிய அவர்கள் மீண்டும் தனது மாந்தோட்டம் உள்ள வளர்புரம் நோக்கி வடிவேல் காரை இயக்க அவருடைய மைத்தனர் ஓட்டுனர் சீட் அருகில் அமர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது மண்ணூர் கூட்டுச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது மைத்துனர் வாங்கிய பனை நுங்கை ஒன்றை காரை இயக்கி கொண்டிருந்த வடிவேல் கையில் கொடுக்க முயன்ற போது அதை தனது வலது கையில் பெற வடிவேலு முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியதில் டயர் வெடித்து கார் தூக்கி வீசப்பட்டது.
இதில் வடிவேலுவிற்கு தலையில் பாலத்த காயமடைந்தும் அவருடைய மைத்தனர் சிறிய காயங்களுடன் இருந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள சவிதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் வடிவேல் பலத்த காயமடைந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் இன்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியை கேட்டு திருமழிசை பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே அச்செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



















