தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஐயாறப்பர் ஆலயத்தில் திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா – ஆரூரா என்ற பக்தி முழக்கத்துடன் அத்திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதும், மேலும் தருமை ஆதினத்திற்கு சொந்தமானதாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலை – மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஐயாறப்பர் – அறம் வளர்த்த நாயகியுடன் திருத்தேரில் எழுந்தருள சிவ கனங்கள் முழுங்க ராஜ வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் பாதுகாப்பினை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்ட மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.