பட்டுக்கோட்டை, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் கட்டிடம் அருகிலும் மேலும் இறந்தவர்களை உடற்கூறு ஆய்வு செய்யும் அறை ஆகியவற்றிற்கு அருகே மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் ஆகியவை கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக தேங்கி அதிலிருந்து பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், விபத்து மற்றும் சந்தேக மரணம் தொடர்பாக உடற்கூறு ஆய்வு செய்வதற்காக கொண்டுவரப்பட்டு உடற்கூறு ஆய்விற்கு பின் இறந்தவர்களின் உடலை பெற்றுச் செல்ல காத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க காத்திருக்கும் பார்வையாளர்கள் இந்த குப்பை கழிவுகளால் துர்நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
மேலும் இந்த குப்பை கழிவுகள் துர்நாற்றத்தால் அருகில் வசிக்கக்கூடிய குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுக்குறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் இதுவரையில் அக்கழிவு குப்பைகளை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உள் மற்றும் புற நோயாளிகளின் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















