கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.
இங்கு இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள் பாலிக்கிறார். இராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விண்ணையும் மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியப்படி காட்சியளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு ஸ்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்திய இசை முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியாக 12ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க கருடசேவையும், தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் நிகழ்ச்சியாக 17ம் தேதி புதன்கிழமை இராமநவமியினை முன்னிட்டு ஸ்ரீ ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.
10 ஆம் நாள் 18 ஆம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகமும் 21 ஆம் தேதி ராஜ உபசார திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.





















