தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் இடி மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா என மத்திய தொல்லியல் துறை நிபுனர்கள் நேற்று ஆய்வு .மேற்கொண்டனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்த கோவிலில் 216 அடி விமான கோபுரமும் உள்ளது. இந்த கோபுரத்தில் உள்ள கலசத்துக்கு அருகே இடிதாங்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடி தாங்கி உரிய முறையில் செயல்படுகிறதா என மாதம் ஒரு முறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை, ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என ஆய்வு செய்யப்படும்.
அப்போது கோபுரத்தின் அருகில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கியின் மூலம் கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் இந்த நிலையில் இடிதாங்கி உரிய சிரத்தன்மையுடன் உள்ளதா என ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு ஆய்வு குழு நடைபெற்றது.
தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் அனில்குமார் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது தொல்லிய துறை அலுவலர்கள் சங்கர் சீதாராமன் எலக்ட்ரிக் பிரிவை சேர்ந்த பிரசாத் கட்டுமான தொழிலைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
அப்போது இடி, மின்னல் ஏற்படும் போது கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா? இதனால மக்களுக்கு பாதிப்பு ஏதுவும் ஏற்படுமா? என இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் இடிதாங்கியில் பொருத்தப்பட்டுள்ள எர்த் கம்பி உரிய முறையில் உள்ளதா? எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை முடிந்து அதன் அறிக்கையை குழுவினர் இன்றே அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்து இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது வேறு பொருத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.
இதனைத் தொடர்ந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இடிதாங்கிகளை இந்த குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.






















