காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பிரார்த்தனா மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சாய்பிரணவ் ஆகிய அவருடைய இரு குழந்தைகளையும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று கல்வி பயில சேர்த்துள்ளார்.
பள்ளி துவங்கும் முன்பே பள்ளிக்கு வந்த இருவரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவருந்தி, காலை இறை வணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரது பெற்றோரும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியருமான கலைவாணி அதில் பங்கு பெற்றார்.
அப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே உரை நிகழ்த்தும் போது, தானும் அரசுப் பள்ளியில்தான் கல்விப் பயின்றேன் எனவும் மேலும் தான் அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்படி கல்வி பயின்றதாலேயே தற்போது அரசு அதிகாரியாக இங்கு நிற்கிறேன் எனவும், தான் அரசு பள்ளியில் கல்விப் பயின்ற மாணவர் என்பதை சொல்வதில் தான் பெருமை கொள்வதாகவும், அதேபோல் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் எனவும் மாணாக்கர்களிடையே கூறினார்.
மேலும் அன்னைக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளதால் அவர்களின் நல்வழி காட்டுதல் படி அனைவரும் கீழ்படிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அரசு ஏராளமான நல திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வரும் நிலையில் அனைவரும் அரசு பள்ளிகளை பெருமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நளினி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரசு பணிப்புரியும் உயர் அலுவலர் தனது குழந்தைகளை அரசு பள்ளியில் தான் பயில வேண்டும் என எண்ணி செயல்பட்ட விதம் அனைவரிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.





















