கும்மிடிப்பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும் கருந் துகள்கள் ஈச்சங்காட்டு மேடு, நாகராஜா கண்டிகை, எஸ் ஆர் கண்டிகை, காயலார் மேடு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் நீர்நிலைகளிலும் படிவதால் தோல் நோய், சுவாசக் கோளாறு, இருமல், சளி, அடுக்கு தும்மல், நுரையீரல் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
அப்பிரச்சினைக் குறித்து அறிந்து அங்கு வந்த வன்னியர் வாழ்வுரிமை சங்கத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகளையும் விவசாய நிலங்களையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை பெர்ரஸ் தொழிற்சாலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக மூட வேண்டும் இல்லையெனில் கடும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் போது எம்டிசி தொழிற்சாலை நீர்நிலைகளை ஆக்கிரமித்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கிருந்த ஏழை விவசாயிகளின் வீடுகளை மட்டும் அகற்றி விட்டு தொழிற்சாலைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.