கும்பகோணம், ஜூலை. 14 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில், வடக்கு திசையில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் கல்லூர் கிராமமாகும். மேலும் இக்கிராமம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஆட்சிப்புரிந்த சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகவும் இக்கிராமம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்போது இக்கிராமத்தினை சிவலோகபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், இக்கிராமத்தின் தெற்கு புறத்தில் புண்ணிய நதியான காவிரி நதியும், வடக்கு புறத்தில் கொள்ளிடமும் அமைய பெற்றுள்ளது இக்கிராமத்தின் மற்றொரு சிறப்பின அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
.மேலும், மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றிலும் பிரசித்திப் பெற்ற இக் கல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவலோகநாயகி, சமேத ஶ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீ இரட்டை பிள்ளையார், ஆகிய மூன்று திருக்கோவில்களில் பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து,. ஸ்ரீ சிவலோகநாதருக்கு நவகுண்ட பக்ஷமும், ஸ்ரீ சிவலோக நாயகிக்கு பஞ்சகுண்ட பக்ஷமும், பரிவார மூர்த்திகளுக்கு 13 ஏககுண்ட பக்ஷமும், வேத சிவ ஆகம முறைப்படி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்து, ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தேவர், கல்லூர் ராமர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.