திருவாரூர், மே. 30 –
திருவாரூர் என்பது மாவட்டத்தின் தலைநகராகவும், மேலும் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்நகரம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் நாள்தோறும் காலையில் அவர்கள் நகராட்சி சார்பில் வழங்கக்கூடிய குடிநீரைத்தான் அனைத்து தேவைகளுக்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலையில், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது குடிநீருடன் கழிவு நீர் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்கள். அதனால் சிலர் தண்ணீர் பிடிக்காமல் திரும்பிச் சென்றதாக தெரிய வருகிறது.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பெருபான்மை மக்கள் தினக்கூலியாகவும், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார்கள். பணம் கொடுத்து தனியாரிடம் குடிநீர் கேன் வாங்க முடியாமல் மிகவும் சிரமத்தோடு தங்கள் வாழ்வு நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இருக்கும் நிலையில் நகராட்சி வழங்கும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதுபோல திருவாரூர் நகராட்சியில் ஐந்தாவது வார்டு பகுதியில் கேக்கரை என்ற பகுதி அமைந்துள்ளது அந்த பகுதியில் வடக்கு தெரு மேல தெரு தெற்கு தெரு மாரியம்மன் கோவில் தெரு முதலான பகுதிகளில் உள்ளன அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் அங்கும் தொடர்ந்து பல மாதங்களாக போதுமான அளவிற்கு குடிநீர் வராமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அப்பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளார்கள். ஆகவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐந்தாவது வார்டு மற்றும் எட்டாவது வார்டு மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.























