கும்மிடிப்பூண்டி, மே. 09 –
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி ஆகியோரது முன்னிலையிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைப்பெற்றது.
மேலும் அக்கூட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு அத்தொழிற்சாலை சார்பாக நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல மேம்பாட்டு நிதியின் மூலம் கிராம வளர்ச்சிக்கு நடைபெற உள்ள நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்குதி வாழ் பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்க அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது சில இளைஞர்கள் மட்டும் தொழிற்சாலைக்கு ஆதரவாக அவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அப்பகுதி மக்கள் தங்களுக்கு மட்டுமல்லாது வார்டு உறுப்பினர்களுக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும், மேலும், ஏற்கனவே இத்தொழிற் சாலையால் இப்பகுதியில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உள்ளூர் ஆட்களுக்கு வேலை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி அதிகப்படியான காற்று மாசு அடைந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொழிற்சாலை காற்று மாசுவே இல்லை என கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது என சிலர் அக்கூட்டத்தில் விமர்சித்தனர்.
மேலும் சித்தராஜா கண்டிகை ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு உரிய தகவல் அளிக்காமல் மேற்கண்ட தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களை மட்டுமே கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்து கருத்து தெரிவிக்க கூறினால் அதற்கு தொழிற்சாலை ஊழியர்கள் என்ன கருத்து தெரிவிப்பார்கள் இதுதான் கருத்து சுதந்திரமா என்ற இளைஞர் ஒருவரின் கேள்விக்கு அதிகாரிகள் உட்பட தொழிற்சாலை நிர்வாகமும் கண் விழி பிதுங்கி போனார்கள். தொடர்ந்து உரிய அறிவிப்புடன் அரசு விதிமுறைகளின் படி கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும், மேலும், மாற்றுத் தேதி அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




















