செங்கல்பட்டு, ஏப். 15 –
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கல் போக்கை மேற்கொண்டு, மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு இராகுல்காந்தி எம்பி பதவியை பறித்துள்ளது என்றவாறு மத்திய அரசு மீது குற்றம் சாட்டி, ஐம்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, தொடர்ந்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அவர்கள் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். இச்சம்பவத்தால், செங்கல்பட்டு ரயில் நிலைய பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.




















