பொன்னேரி, மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து அன்று மாலை 3 மணி அளவில் பள்ளியில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாணவன் பிரத்தீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அம்மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் பிரத்தீஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுக் குறித்து பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லையென என மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் அப்பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அம்மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகம் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பொன்னேரி காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் இப்பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக இதுப்போன்று ஆரணி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பாஸ்கரன் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (14) அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அம்மாணவன் தமிழ்ச்செல்வன் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அம்மாணவனின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் மர்ம மான நிலையில் உயிரிழந்த அச்சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில் பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் , கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி, பொன்னேரி இன்ஸ்பெக்டர் மார்ட்டின், உள்ளிட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர், இரு வேறு சம்பவங்கள் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர், இதனிடையே மாணவன் பிரத்தீஸ்வரன் உறவினர்கள்
பொன்னேரி திருவொற்றியூர் இடையே செல்லும் சாலையில் அமர்ந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






















