பூவிருந்தவல்லி, மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அவ்வாய்வில் 4 ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. மேலும் அதிலிருந்த வாகனப்பதிவு எண்களைக்கொண்டு ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்களை தேடிவந்த போலீசார் அஸ்லாம் கான், சாலமன் தேவ குமார், அர்ஜுன், கோவிந்த ராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து ரேஸிற்கு பயன்படுத்திய அவர்கள் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ ரேஸில் யார் கெத்து என்பதற்காகவும், மேலும் அப்போட்டியில் ரூ. 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பந்தயம் வைத்து ஆட்டோ ரேஸ் நடத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் அந்த 4 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே சென்னை வெளிவட்ட சாலையில் நடைபெற்ற ஆட்டோ ரேஸ் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.