குடவாசல், மார்ச். 20 –    

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, கூந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட செம்பியன் கூந்தலூர் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் என இரண்டு தரப்பு மக்கள் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செம்பியன் கூந்தலூர், பிற்படுத்தப்பட்ட மக்களால் அருள்மிகு ஸ்ரீரேணுகா காளியம்மன்  திருக்கோயில் கட்டப்பட்டு அங்கு திருவிழா நடைபெற்று வந்துள்ளது.

அப்பொழுது  பட்டியலின மக்கள் சாமியை எங்கள் தெரு வழியாக கொண்டு வந்து, நாங்கள் வழிபடும் கோவிலுக்கு அருகில் வைத்து, நாங்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் ‘எப்போதும் போல் பொது இடத்தில்தான் சுவாமி நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடைபெற்று பிரச்சனை எழுந்துள்ளது..

அதனைத் தொடர்ந்து கடந்த 22. 07. 2019 ஆம் தேதியன்று, குடவாசல் தாசில்தார் ஜீவானந்தம் இரு தரப்பையும் சமாதானம் செய்து, ‘சுவாமி தரிசனம்’  செய்யலாம் ஆனால் ‘சுவாமி ஊர்வலம்’ செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்து அக்கோவிலை பூட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 28.07.2019 அன்று ஒரு பிரிவினர் போலீஸார்  பாதுகாப்பில் அத்திருக்கோயில் இருந்த நிலையிலேயே அத்துமீறி கோவில் கதவை உடைத்து உள்ளே சென்று, குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை  பொருட்களை உடைத்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

இதுகுறித்து இரவாஞ்சேரி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, காலனி தெருவை சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இப்பிரச்சினைக் குறித்து, இரு தரப்பினரையும் அழைத்து  கோட்டாட்சியர் பாலச்சந்திரன் அப்பொழுது அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற்ற நிலையிலும் இவ்வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும், அந்நிகழ்விற்கு பின்பு அன்றிலிருந்து இன்று வரையிலும்.. 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும். அருள்மிகு ஸ்ரீரேணுகா காளியம்மன் திருக்கோயில் பராமரிப்பு எதுவுமின்றி சிதிலடைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு, மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் அனைவரும் கோவிலில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.. எனவும், மேலும், பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோவில் அருகே சுவாமியை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், இரண்டு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

பேட்டிகள்:

  1. ஆசை மணி, கூந்தலூர்.
  2. சுப்பிரமணியன், கூந்தலூர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here