கும்பகோணம், மார்ச். 09 –
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும், அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியானது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, இளநிலைக்குத் தாள் ஒன்றுக்கு ரூ. 75 ஆகயிருந்த கட்டணத் தொகையை ரூ. 130 ஆகவும், முதுகலை மாணவர்களுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.100 இருந்த கட்டணத்தை ரூ.150 ஆகவும் உயர்த்தியுள்ளது.
மேலும் மறு மதிப்பீட்டு கட்டணத்தை ரூ. 750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் வாயில் முன்பாக அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் நிர்வாகத்தின் பேச்சை கேட்க மறுத்து, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது அரசு கல்லூரியா.? அல்லது தனியார் கல்லூரியா.? என்றவாறு மாணவர்கள் கேள்விகளையெழுப்பி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் தொடக்கத்தில் குறைவான மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் நேரம் செல்லச்செல்ல மாணவர்களின் வருகை எண்ணிக்கை அதிகமானது, இதனால் கல்லூரி நிர்வாகம் செய்வதறியாது தவித்து நின்றனர். இதனால் கல்லூரி வாயிலில் அமைந்துள்ள கல்லணை – பூம்புகார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.