கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம், டிச. 06 –
கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்தும், திருநீறு குங்குமம் அணிவித்தும் போஸ்டர் ஒட்டியதால் பல்வேறு தரப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியதாக்க் கூறப்படுகிறது.
அச்சர்ச்சைக்குரிய போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்தனர். அதனைத் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டியதை கண்டித்தும், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி தலைமையில், மற்றும் திரளான விசிக தொண்டர்களும் கிழக்கு காவல் நிலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
குருமூர்த்தி கைது செய்யும் வரை முற்றுகை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தொடர்ந்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என காவல்துறை வட்டாரமே தெரிவித்ததை தொடர்ந்து, விசிக கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருகிறது.