திருவாரூர், அக். 03 –
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காட்டூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் வாசு முன்னிலையிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் இல்லை யெனில் வருங்காலங்களில் வாக்களிப்பதற்கு சிரமம் என்றும் எனவே அனைவரும் உடனடியாக ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சியின் வரவு செலவு தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நடவடிக்கை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், சுகாதாரம், ஜல்ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், மற்றும் இதர பொருட்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேவதி செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ப்ரியா, தலைமை ஆசிரியர் பானுமதி பற்றாளர் திலகவதி , கால்நடை மருத்துவர் வேதசூர்யா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




















